சென்னை:பல்லாவரம் ரேடியல் சாலையில் இரவு நேரத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் போதையில் சென்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் உபயோகப்படுத்தி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், போன் செய்தால் போதும், நாம் இருக்கும் இடத்திற்கே மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் கிடைக்கும் என்று இளைஞர்கள் விசாரணையில் தெரிவித்து உள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர், அவர்களை வைத்தே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவரை கைது செய்ய முடிவு செய்து, கல்லூரி மாணவர்கள் போன்று சம்மந்தப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்து, மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதனை உண்மை என்று நம்பி, அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே நபர் ஒருவர் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருட்களை கொண்டு வந்துள்ளார். அவரை அங்கு தயாராக நின்ற பல்லாவரம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்த போது, அதில் சுமார் 5 கிலோ 800 கிராம் எடையிலான மெத்தாம்பெட்டமைன் என்னும் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம், கிருஷ்ணா நகர் 11-வது தெருவைச் சேர்ந்த சூரிய மூர்த்தி (வயது 55) என்பதும், கடந்த எட்டு ஆண்டுகளாக பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அவ்வாறு கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் வரதராஜபுரத்தில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்த அவர், மேற்கொண்டு பண்ணை வீடு வாங்குவதற்காகவும் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், இவ்வாறு மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளை பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசர் கூறினர்.
மேலும் அவரிடம் இருந்து மூன்று செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூபாய் இரண்டு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 கிலோ 800 கிராம் அளவிலா மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் பல்லாவரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் திருட்டு.. அதே நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது - என்ன நடந்தது?