சென்னை: மணலி மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(24). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள மண்டபத்தில் நடத்த நேற்று (அக்டோபர் 19) ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
17 வயது சிறுமிக்கு திருமணம் - தடுத்து நிறுத்திய போலீசார் - சென்னை செய்திகள்
17 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி திருமண மண்டபத்தில் இரு வீட்டாரும் குவிந்தனர். இந்த நிலையில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து கொடுங்கையூர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு திருமணத்திற்கு போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், மணமகளுக்கு 18 வயது ஆகவில்லை என தெரியவந்தது. இதனால் திருமணத்தை நிறுத்தி விட்டு இரு வீட்டாரையும் விசாரிப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.