ஆவடி அருகே அயப்பாக்கத்தில் 425 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, தற்போது சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகளும், மூன்றாயிரம் கடைகளும் உள்ளன. மேலும் அப்பகுதியில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உருவாகும் போதே, அப்பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய காவல் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் காவல்துறை நிர்வாகம் உரிய தொகையை செலுத்தி அக்கட்டடத்தை கையகப்படுத்தவில்லை. இதனால் 26 ஆண்டுகள் ஆகியும் காவல்நிலைய கட்டடம் திறக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் அக்கட்டடத்திலிருந்த கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருள்களை சமூக விரோதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்நிலைய கட்டடத்தை திறக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஊரகத் தொழில் அமைச்சர் பெஞ்சமின் காவல் நிலைய கட்டடத்தை, அலுவலர்களுடன் வந்து ஆய்வு செய்தார். தற்போது காவல் கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்ட கதவு, ஜன்னல்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் காவல் நிலைய கட்டடம் விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அயப்பாக்கம் புதிய காவல் நிலையம் உருவாகும் போது, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பூர்வீக கிராமம், அண்ணனூர், கோணாம்பேடு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடங்கி இருக்க வேண்டும். அப்படி அமைத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்ற சம்பவங்களை தடுக்கலாம். இதனால், திருமுல்லைவாயல் காவல் நிலைய பரபரப்பு குறைவதுடன், காவல்துறையினருக்கும் வேலைப்பளு குறையும் என்றனர்.
இதையும் படிங்க:பாம்பன் தூக்கு பாலத்தை கடந்தது மிதவை கப்பல்!