சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் “கரோனா காலத்தின் போது காவலர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடந்ததால் கரோனா நோயிலிருந்து விடுபட்டு இருந்தோம்.
தற்போது மீண்டும் கரோனா பரவத் தொடங்கி இருப்பதால் அனைத்து காவலர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் பணிபுரியும் காவலர் ஒருவர் ரம்மி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு சம்பாதித்த அனைத்து தொகையையும் இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இது போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதை பின்பற்றி வருவதாக நம்புகிறேன்.
மேலும் சமீபகாலமாக கவர்ச்சி விளம்பரங்களை நம்பி அதிக லாபம் ஈட்டலாம் என கிரிப்டோகரன்சி மற்றும் அதனை சார்ந்த பணமதிப்பு முதலீடுகளில் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து ஏமாந்து வருகின்றனர்.
குறிப்பாக சில காவலர்கள் பணியில் கவனமின்றி பணம் மற்றும் சேமிப்புகளை அதில் முதலீடு செய்து ஏமாந்து உயிரை மாய்த்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல் குடும்பங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
உதாரணமாக இரு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் டெலிகிராமில் வந்த விளம்பரங்களை பார்த்து bit fund mining investment company மற்றும் online bitcoin trading ஆகிய நிறுவனம் மூலமாக கிரிப்டோகரன்சியில் முறையே 20,67,136 மற்றும் 1.24 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்தி தங்கள் ஏமாறுவதை அறியாமல் செலுத்தி வந்துள்ளனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதே போன்ற கவர்ச்சி விளம்பரங்களை ஏமாறுவது வேதனை அளிக்கிறது. எனவே கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி காவலர்கள் பணத்தை இழக்காமல் நியாயமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்துங்கள். காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இந்த சுற்றறிக்கையை அனுப்புங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:குஜராத்தில் ஆயுதங்கள் பதுக்கிய 10 பேர் கைது