தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கிச் சூடு நடத்திய முதல் பெண் எஸ்.ஐ. - சென்னையில் நடந்தது என்ன? - ayanavaram

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சூழ்நிலை உருவாகியது என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

காவலரைத் தாக்கி தப்ப முயன்ற நபர்
காவலரைத் தாக்கி தப்ப முயன்ற நபர்

By

Published : Feb 22, 2023, 9:58 AM IST

Updated : Feb 22, 2023, 12:46 PM IST

சென்னை: அயனாவரம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், உதவி ஆய்வாளர் சங்கர் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கு இருசக்கர வாகனத்தை கௌதம் என்பவர் இயக்கி வந்துள்ளார்.

அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் சூர்யா என்கிற பெண்டு சூர்யா மற்றும் அஜித் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்தும், காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில், அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் திருவள்ளுவர் மாவட்டம் விரைந்து சென்று பெண்டு சூர்யாவை கைது செய்தனர்.

பின்னர் அவரை சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும் பொழுது பெண்டு சூர்யா தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திய பொழுது அங்கிருந்து பெண்டு சூர்யா தப்பி ஓடி உள்ளார். அப்பொழுது தலைமை காவலர் அமானுதீன் மற்றும் காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு இருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளார். அப்பொழுது நடந்த இந்த தாக்குதலில் அயனாவரம் தலைமைக் காவலர் அமானுதீன் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காகவும், காவலர்களை பாதுகாக்கவும் உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெண்டு சூர்யாவின் முழங்கால் பகுதியில் அவரை சுட்டுப் பிடித்ததாக கூறப்படுகிறது.

காவலரைத் தாக்கி தப்ப முயன்ற நபர்

பின்னர் பிடிபட்ட பெண்டு சூர்யாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களுக்கும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நடைபெற்ற நியூ ஆவடி சாலை ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே உள்ள கரும்பு ஜூஸ் கடை அருகில் காவல் துறையின் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க சங்கிலி பறிப்பு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதில் பெரும்பாலான வழக்குகள் போலீசாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி பதிவு செய்யப்பட்டது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை: பல்வேறு தரப்பினர் இரங்கல்!

Last Updated : Feb 22, 2023, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details