தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kalakshetra: கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம்: ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - கலாக்ஷேத்ரா சர்ச்சையில் குற்றப்பத்திரிக்கை தயார்

கலாக்ஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தயாராகி விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Kalakshetra
கலாக்ஷேத்ரா

By

Published : Jul 14, 2023, 11:56 AM IST

Updated : Jul 14, 2023, 12:26 PM IST

சென்னை: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை திருவான்மையூரில் இயங்கி வருகிறது. அதில் கடந்த மார்ச் மாதம் கலாக்ஷேத்ராவில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து இந்த பாலியல் வழக்கு சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவத் துவங்கி, போராட்டம் என மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு போலீசார், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். அதில், ஹரி பத்மன் மட்டுமல்லாது, மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு விசாரணை நடத்திய போது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். மாணவிகள் புகார்கள் அளிப்பதற்காக ஈமெயில் முகவரியும் மாநில மகளிர் ஆணையம் கொடுத்திருந்தது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மொத்தம் 162 பேர் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹரி பத்மனுக்கு கடந்த ஜூன் 6ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஹரி பத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கலைஞர் நூலக திறப்பு விழா: ஊர்ப்புற நூலகர்களுக்கு விடியல் கிட்டுமா? - ஒரு சிறப்புத் தொகுப்பு!

Last Updated : Jul 14, 2023, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details