சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றபோது, பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கக்கோரி அதிமுக சார்பில் பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடிதம் வழங்கி வெகுநாட்கள் ஆகியும் இதுவரை ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காததைக் குறிப்பிட்டு அதிமுக-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் நேற்று சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக-வினர் அனைவரையும் போலீசார் கைது செய்து ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, காமராஜ், ஜெயகுமார், செல்லூர் ராஜு, சி.வி சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, வீரமணி, ஆர்.பி உதயகுமார், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 750 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் சட்டவிரோதமாகக் கூடுதல், மாநகர காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் கூடுதலாக சில பிரிவுகள் சேர்க்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சபாநாயகர் நடுநிலைமையோடு செயல்படவில்லை - தடையை மீறி போராட்டம் நடத்திய ஈபிஎஸ் கடும் தாக்கு