சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், அரசு உத்தரவின்படி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர், கரோனா வழிமுறைகளை மீறி ஊர்வலம் மேற்கொண்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் ரமேஷ் கைதுக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை
பின்னர் இது தொடர்பாக 200 மாணவர்கள் மீதும் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இதேபோன்று செப்டம்பர் 3 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் பகுதி மாநகர பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்து, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது டி.பி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான ஆணையை காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் மாணவர்களுக்கு அறிவுரைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை
குறிப்பாக பேருந்து, ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு நெறிப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். பெற்றோருக்கு மாணவர்கள் செய்யும் கைமாறு, கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்வதுதான்.
சில தவறான மாணவர்களின் தூண்டுதலின்படி, குற்ற செயல்கள் நடைபெறுகின்றன. மாணவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை இழக்க வேண்டாம். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு நிர்பந்தம் இல்லை.
குற்ற வழக்குகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம். பேருந்துகளில் ஒலிபெருக்கி வைத்துக்கொண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 208 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம்.
குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுவோர் மீது நடவடிக்கை
வருங்காலங்களில் இனி ஒரு வழக்கு கூட தங்கள் மேல் வரக்கூடாது என்பதில், மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாணவர்களைத் தூண்டிவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கும் பின்னணி நபர்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க:கைம்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார் கைது