சென்னை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் அக்டோபர் 29ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக்கோரி, காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்க முடியாது என காவல் துறை மறுத்துள்ளது.
காவல் துறையின் உத்தரவை ரத்து செய்து, பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய பேரணியை பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்த்தவ பேராலயங்கள் உள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்ணை ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டது" என கூறினார்.
பின்னர், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்காமல், கட்டுப்பாடுகள் விதித்து, ஏற்பாட்டாளர்களிடம் உத்திரவாதம் பெற்று, நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, 'லியோ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியின் போது, ரோகிணி திரையரங்கின் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி ஆகியவற்றை காவல் துறையினர் சரியான முறையின் கையாளவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.