சென்னை பெருநகர காவல் துறையினர் சார்பாக பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் உதவி ஆணையாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர், பம்மல் பகுதி முக்கிய பிரதான சாலைகளில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பேரணியாக நடந்து பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியின் போது காவல்துறையினர் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், ஒலிபெருக்கி மூலமாகவும் வெளியில் வரும்போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும், தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைவரும் தங்களின் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். கரோனா அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.