சென்னை: வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், இரண்டு பள்ளி மாணவர்கள், ஓடும் மாநகரப்பேருந்தை தடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்தும், பொதுமக்களே வீடியோ எடுத்து சமூக வலைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் அளித்து வருகின்றனர். வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை காவல்துறையின் சமூக வலைதளப்பக்கத்தை இணைத்து, புகார் அளிக்கும்போது, காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், லைக்ஸ்க்காகவும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான வீடியோக்களும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் செய்து வீடியோவாக வெளியிடுவது அதிகமாகி வருகிறது.
அந்த வகையில், இரண்டு பள்ளி மாணவர்கள் மாநகரப்பேருந்து வரும்போது வழி மறித்து, சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து, இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை சமூக வலைதளப்பக்கத்தை இணைத்து பலர் புகார் அளித்துள்ளனர். இந்தப்புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.