ஆசியாவிலே மிகப்பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி வட மாநில தொழிலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிழப்பிற்காக வந்த வட மாநில தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சுற்றி, வாடகை வீட்டில் தங்கியிருந்த 700 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை, வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யக் கூறியுள்ளனர். இதனால் வீடு, உணவின்றி தொழிலாளர்கள் தவித்துவந்துள்ளனர்.
வடமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்கிய காவல் துறை இது தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒவ்வொரு வீடாக சென்று அவர்களது வீட்டின் உரிமையாளர்களை அழைத்து, அடுத்த மூன்று மாதத்திற்கு அவர்களை வீடு காலி செய்ய சொல்ல வேண்டாம் எனவும், வீட்டு வாடகை கேட்க வேண்டாம் எனவும் வேண்டி விரும்பி கேட்டுகொண்டார்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி அம்பத்தூர் ஏழாவது மண்டலத்தை அணுகிய விஜயராகவன், அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்ததோடு, சமூக இடைவெளிவிட்டு அவர்களுக்கு உணவுகளையும் வழங்கினார். காவல் துறையினரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றோருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய ரயில்வே போலீஸ்!