சென்னை:புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதில் 1,500 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் போலீசார் போக்குவரத்து மாற்றங்கள் செய்து தடுப்புகள், பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக, பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாகன தணிக்கைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நினைவுச் சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து சாலைகளும் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்பட உள்ளதாகவும், அதேபோல் மெரினா கடற்கரையில் உள்ள உட்புறச் சாலைகள் இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் எனவும், இதனால் அங்கு வாகனங்கள் நிறுத்த எந்த அனுமதியும் கிடையாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்கு வரும் நபர்கள் தங்கள் வாகனங்களை சிவானந்தா சாலை பாரதியார் சாலை பொதுப்பணித்துறை அலுவலகம் பின்புற சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மாலை 6 மணி முதல் கடற்கரைக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது அதற்காக மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.