சென்னை காவல் துறை மீண்டும் ரவுடிகளை தரம் பிரித்துள்ளனர். கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகளவு ரவுடிகள் உருவாகியிருப்பது சென்னை காவல்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 674 ரவுடிகள் இருந்தது தெரியவந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 711 ரவுடிகளாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது.
அதிலும் ஏ- பிளஸ் கேட்டகரி ரவுடிகள் 69 லிருந்து 92ஆக அதிகரித்திருப்பது சென்னை காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஏ கேட்டகரியில் 229 ரவுடிகளும், பி கேட்டகரியில் ஆயிரத்து 481 ரவுடிகளும், சி கேட்டகரியில் ஆயிரத்து 894 ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக தரம் பிரித்து வைக்கப்பட்டனர். தற்போது ஏ கேட்டகரி 276 ரவுடிகள், பி கேட்டகரி ஆயிரத்து 699 ரவுடிகள், சி கேட்டகரி ஆயிரத்து 644 ரவுடிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 711 ரவுடிகள் அதிகரித்து இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
Drive against rowdy elements என்ற ஆப்ரேஷன் மூலம் கடந்த ஆறு மாதத்தில் 130 ரவுடிகளை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஏபிளஸ் கேட்டகரியில் 25 ரவுடிகள், ஏ கேட்டகரியில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், சிடி மணி, கிழங்கு சரவணன் உட்பட பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.