யூ-ட்யூபில் ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பிவந்த மதன் என்பவர் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மதன் மீது பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக மதன் மீது 160-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
இதனால், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தனிப்படை அமைத்து பப்ஜி மதனை தேடியபோது வி.பி.என் செர்வரை பயன்படுத்தி தப்பித்து வருவது தெரியவந்தது. மேலும் பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளிலுள்ள அவரது வீட்டை சோதனைசெய்தனர். பின்னர். அங்கிருந்த அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதன் தொடங்கப்பட்ட மூன்று யூ-ட்யூப் சேனலுக்கும் மனைவியான கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. மேலும், யூ-ட்யூப் வருமானம் மூலம் அவர்கள் மூன்று சொகுசு கார்கள், இரண்டு சொகுசு பங்களாக்கள் ஆகியவை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், யூ-ட்யூபில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
யூ-ட்யூபால் வாங்கப்பட்ட ஆடம்பர கார் இதனையடுத்து, பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்த மனைவி கிருத்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜுன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர். மேலும் மதனின் தந்தையான மாணிக்கத்திடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கிருத்திகா பப்ஜி விளையாட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு பணத்தை, பிளாக்செயின் https://blockchain.info/ மூலம் பிட்காயினாக மாற்றி முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மதனின் வங்கி கணக்குகளை முடக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், மதனின் மனைவியிடம் விசாரணை நடத்தி, மதனின் நெருக்கமானவர்கள் யார்? நண்பர்கள் யார்? என்ற பட்டியலை சேகரித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், மனைவி கிருத்திகா கைதுசெய்யப்பட்டுள்ளதால் மதன் வேறு வழியின்றி காவல் துறையினரிடம் சரணடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல வியூகங்களை வகுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை மதனை கைதுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், மதனை போல் சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு அதில் வருவாய் ஈட்டிவரும் நபர்களையும் கண்காணித்து வருவதாக சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் தண்ணி காட்டும் ’பப்ஜி’ மதன்!