சென்னை: விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாகச் சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, சென்னை பெருநகரில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி காவல்துறை அனுமதி வழங்கியது.
அதன் அடிப்படையில், சென்னையில் மட்டும் சுமார் 1,519 விநாயகர் சிலைகளை பல்வேறு அமைப்பினர்கள் வைத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து, இன்று (செப்.23) பாரதிய சிவசேனா அமைப்பினரும், நாளை (செப்.24) இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு, கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கவுள்ளனர்.
அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16 ஆயிரத்து 500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிலைகளைக் கரைப்பதற்கு Conveyar Belt, கிரேன்கள், படகுகள் உதவிக் கொண்டு சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்குத் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் போன்று அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மூலம் தீவிர ரோந்து பணிகள் காவல்துறையினர் மேற்குள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எங்கே கரைக்கலாம்?: விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள் 1.சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், 2.பல்கலை நகர், நீலாங்கரை, 3.காசிமேடு மீன்பிடி துறைமுகம், 4.திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கக் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டை மீறினால் என்ன நடக்கும்!:அதன்பேரில், சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை 4 இடங்களில் கரைக்கச் சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்தியேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவ்வழியே, விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்று சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனச் சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கை விதித்துள்ளனர்.
இதையும் படிங்க: பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்!