சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 449 வாகனச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 58 சந்திப்புகளில் பைக் ரேஸ் நடப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 553 தேவாலயங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே போல நட்சத்திர ஓட்டல்களில் தடையை மீறி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறதா என்பதனை காவல் துறை கண்காணித்து வருகிறது.
மேலும், ஓட்டல்கள், பார்கள், கிளப், ரிசாட்டுகளில் அனுமதித்த நேரத்தைக் கடந்து செயல்படுகிறதா என்பதனை கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியும் பைக் ரேஸ்களைத் தடுப்பதற்கும் புத்தாண்டு நேரத்தையொட்டி சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை சாவடிகளை Zigzag போல அமைத்து, எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்காக விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.