சென்னை: காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மே 10) காலை கல்லூரி வளாகத்தின் நூலகத்திற்கு அருகே சில மாணவர்கள் கஞ்சா பிடித்து வந்தனர். இதனைக் கண்ட புவியியல் துறை பேராசிரியர், கஞ்சா பிடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை அண்ணா சதுக்கம் காவல் துறையினருக்கு பேராசிரியர் அனுப்பி வைத்தார். இதனையடுத்து கல்லூரிக்கு விரைந்து வந்த காவல் துறையினர், கஞ்சா பிடித்த மூன்று மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சுனில் குமார் (21), முதலாம் ஆண்டு படிக்கக்கூடிய தினேஷ் குமார் (19), தனுஷ் (19) என்பது தெரியவந்தது.