தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டை உலுக்கிய 2 கொள்ளை சம்பவம்.. ஒரே கும்பல் கைவரிசை? - AndhraPradesh Police

சென்னையில் நகைக்கடை கொள்ளை மற்றும் திருவண்ணாமலை 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை ஆகிய 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளை கும்பலா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டை உலுக்கிய 2 கொள்ளை சம்பவம்.. ஒரே கொள்ளை கும்பலா?
தமிழ்நாட்டை உலுக்கிய 2 கொள்ளை சம்பவம்.. ஒரே கொள்ளை கும்பலா?

By

Published : Feb 13, 2023, 7:12 AM IST

சென்னை:சென்னை திரு.வி.க. நகரில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில், கடந்த பிப்ரவரி 10 அன்று ஷெட்டரில் துளையிட்டு 9 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு 9 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமழிசை வழியாகக் கொள்ளையடித்த 2 மணி நேரத்தில் கொள்ளையர்கள் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற உத்தேசத்தின் அடிப்படையிலும் தனிப்படை காவல் துறையினர், ஆந்திர காவல் துறை உதவியோடு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வாறு சென்னையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இரண்டாவது நாளிலே, அதாவது நேற்று (பிப்.12) திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அடுத்தடுத்து இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்ததைக் காவல் துறையினர் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 6 பேர் பயணிக்கும் காரை பயன்படுத்தி, யாரும் இல்லாத இடமாக நோட்டமிட்டு பெரிய கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இந்த 2 சம்பவங்களிலும் கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி கொள்ளை நிகழ்த்தியதும், காவலாளி இல்லாத இடங்களில் கொள்ளை நிகழ்த்தியவுடன், ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றதும் காவல் துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இந்த 2 கொள்ளைச் சம்பவங்களும் பல விதங்களில் ஒரே மாதிரியாக நிகழ்ந்திருப்பதால், ஒரே கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த கும்பல் திட்டமிட்டு இந்த சம்பவங்களை அரங்கேற்றி உள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படை காவல் துறையினர், ஆந்திர காவல் துறையினரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம் தமிழ்நாட்டிலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்றும், சுங்கச்சாவடிகள் உள்பட மாநில எல்லைகளிலும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை எதிரொலி: வாகன சோதனை, விடுதிகளில் ஆய்வு செய்ய டிஜிபி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details