சென்னை:சென்னை கிண்டியில் அர்பன் கம்பெனி என்கிற ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டாக தியாகராய நகரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பியூட்டிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயதசமி தினமான நேற்று மதிய நேரத்தில் தியாகராய நகரில் உள்ள பாரத சாரதிபுரம் பகுதியில் வந்த அழைப்பை ஏற்று ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவர் மேக்கப் போடுவதற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பெண் ஒருவருக்கு மேக்கப் உள்ளிட்ட அழகு கலை பணிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் அதற்கான கட்டணம் 1,175 ரூபாயை வாடிக்கையாளரிடம் பெண் அழகு கலை நிபுணர் கேட்டுள்ளார். அதனை கொடுக்க மறுத்த அந்தப் பெண் தனது கணவருடன் சேர்ந்து கொண்டு அழகு கலை நிபுணரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் வீட்டிற்குள் வைத்து கதவை பூட்டியதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 4 மணி நேரம் வீட்டில் அடைத்து வைத்திருந்த நிலையில் அழகு கலை நிபுணர், காவல்துறை அவசர உதவி என் 100க்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் பியூட்ஷியனை மீட்டு உள்ளனர்.