சென்னை:ஆந்திரா மாநிலத்தைச்சேர்ந்தவர் பவுலின் (எ) தீபா. இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தமிழ்த்திரைப்படங்கள் பலவற்றில் துணை நடிகையாகவும், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
பவுலின், கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.17) இரவு நடிகை பவுலின் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்து நடிகை தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கோயம்பேடு காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று (செப்.18) மாலை உடற்கூராய்வு முடிந்து, நடிகை பவுலின் உடல் அவரது உறவினர்களால் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நடிகை பவுலின் எழுதிவைத்த கடிதம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றைக் கைப்பற்றி கோயம்பேடு காவல் துறையினர் நடிகை பவுலின் காதலன் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நடிகை பவுலின் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் செல்போனில் காதலன் சிராஜுதீனிடம் வாக்குவாதம் செய்து, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகப் பேசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.