சென்னை: சமீப காலமாக காவலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்த வண்ணம் இருக்கிறது. ஒரே மாதத்தில் இரண்டு காவலர்கள் உயிரிழந்த நிலையில் இன்று பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுகந்தி (25), கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் கீழ்பாக்கம் குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். காவலர் சுகந்தி சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் தனது தம்பி சுப்புராயன் என்பவருடன் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
தற்பொழுது சுகந்தி தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.எஸ்.புரம் பகுதியில் கிரைம் சோன் பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இன்று காலை பணிமுடிந்து 9 மணியளவில் வீட்டிற்குச் சென்ற சுகந்தி சமையலறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சுகந்திய மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதியளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோயம்பேடு காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பாரத மாதாவுக்கு உயிர் இருந்திருந்தால்.. மணிப்பூர் விவகாரத்தை காட்டமாக விமர்சித்த சீமான்!
முதற்கட்ட விசாரணையில், பெண் காவலர் சுகந்தி, திருப்பூரில் பணியாற்றும் போது தன்னோடு பணியாற்றி வந்த விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மனைவிவை விவகாரத்து செய்து விட்டு, சுகந்தியை திருமணம் செய்து கொள்வதாகவும், இது சுகந்தி வீட்டிற்கு தெரியும் என்று கூறப்படுகிறது.
தற்போது விஷ்ணு அவிநாசி காவல் நிலையத்தில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல தான் இன்று காலை பணிமுடிந்து வீட்டிற்குச் சென்ற சுகந்தி தனது காதலன் விஷ்ணுவுடன் வீடியோ காலில் பேசி உள்ளார்.
அப்போது சுகந்தி காதலன் விஷ்ணுவிடம் தான் தற்கொலை செய்து கொள்ளவதாக கூறியிருக்கிறார். அச்சமடைந்த விஷ்ணு தனது நண்பர் காவலர் சேது என்பவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சேது சுகந்தியின் தம்பி சுப்புராயனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்புராயன் தான் வெளியே இருந்ததால் தனது சித்தி அனு என்பவரிடம் தெரிவிக்க அவர் உடனே வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சுகந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், காவலர் சுகந்தி காதல் விவகாரத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா உள்ளிட்ட பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல கடந்த 7 ஆம் தேதி கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார், கடந்த 10 ஆம் தேதி அருண்குமார் என்ற காவலர் தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண் காவலர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுபோதையில் கணவரை கோடாரியால் அடித்துக் கொன்ற கர்ப்பிணி! சத்தீஷ்கரில் அரங்கேறிய கொடூரம்!