சென்னை:அயனாவரம்- குன்னூர் நெடுஞ்சாலைப் பகுதியில், நேற்று (ஜூன் 19) பகல்வேளையில் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில், தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஏழு தோட்டாக்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, தூய்மைப்பணியாளர்கள் அயனாவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தூய்மைப்பணியாளர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை (Gun found in Chennai) கைப்பற்றினர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாளையக்காரத் தெருவில் உள்ள ஜெனிஷா ஜான்சன் என்பவர் வீட்டை காலி செய்யும் போது தேவையில்லாத பொருட்களை, மீன் பாடி வண்டியில் ஏற்றி குப்பைத்தொட்டியில் கொட்டியுள்ளது தெரியவந்தது.
அப்போது தூய்மைப்பணியாளர்கள் குப்பையை பிரிக்கும் போது, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பல பாஸ்போர்ட்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஜெனிஷா ஜான்சனின் கணவர் ஜான்சன் கைத்துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்ததும், அவர் இறந்த பின்பு தற்போது வீட்டை காலி செய்யும் போது தெரியாமல் குப்பையோடு இணைத்து போட்டு விட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கைத்துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? இந்த கைத்துப்பாக்கி எப்படி வந்தது? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைத்துப்பாக்கியை பார்த்தவுடன் தூய்மைப்பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து போலீசார் விசாரணை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இவ்வாறு சென்னையில் குப்பைத்தொட்டியில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திராவிட தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது - தமிமுன் அன்சாரி