சென்னை:சென்னையில் 13 வயது சிறுமி ஒருவர் நேற்று (ஆக.28) காலை தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பேனாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த நிலையில், அதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, சிறுமியின் பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் சிறுமியின் வீட்டிற்கு வந்து ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பேனா கேமராவை கைக்குட்டை மூலம் எடுத்துக் காவல் நிலையம் கொண்டுவந்தனர். மேலும் விசாரணைக்காக, இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் ஏற்கனவே அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்த நபரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், “சிறுமி காலை குளிக்கச் சென்றபோது அங்கு யாரோ நடமாடுவது போல் இருப்பதாக சத்தம் கேட்டு என்னை அழைத்தார் எனவும், நாங்கள் சென்று பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்னும் இளைஞர் எங்கள் வீட்டின் குளியல் அறை அருகே சுற்றித்திரிந்தார் எனவும், எங்களைப் பார்த்ததும் ஓடிவிட்டார் எனவும் கூறினார். அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்த பின்னர், எனது மகள் மீண்டும் குளிக்கச் சென்றபோது, அங்கு ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் எனக் கூறினார்.