சென்னை: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
பக்கத்து வீடுகளைச் சேர்ந்த காசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் முருகன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக விசாரிக்க வந்த அரித்துவாரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார், காசியை லத்தியால் தாக்கியுள்ளார்.
இதைத் தட்டிக் கேட்ட குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த உதவி ஆய்வாளர், வழக்கு ஒன்றில் அவரை கைது செய்வதற்காக, அவரது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, 8 மற்றும் 5 வயதுடைய சிறுமிகளை காவல் துறையினரின் வேனுக்குள் வைத்து விசாரித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட அச்சத்தில் குழந்தைகள், ஒரு வாரத்துக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், காவல் துறையினரால் தனது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குமார், மனித உரிமை ஆணையத்தில் புகார் தாக்கல் செய்தார்.