சென்னை:பிரபல தனியார் தொலைகாட்சி நெடும் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவந்த சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மட்டுமின்றி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.
சித்ராவின் தந்தை தனது மகளின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், சினிமா நடிகை ஷாலு ஷம்மு நேற்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் உங்கள் வாழ்க்கை துணை பற்றிய விவகாரத்தில் எந்தத் தவறான முடிவும் எடுக்க வேண்டாம் எனப் பலமுறை அறிவுறுத்தியும் நீங்கள் முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் இல்லை எனப் பதிவிட்டிருந்தார்.