சென்னை:ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு இடையே உச்சக்கட்ட போராட்டம் நடந்து வரும் நிலையில், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 126 வது வட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில், நேற்று இரவு (ஜூன்.21) ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, திடீரென அதிமுக நிர்வாகி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர் உடலில் தண்ணீரை ஊற்றி அழைத்து சென்று விசாரித்த போது, சென்னை தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கேசவன் என்பதும் தெரியவந்தது.
இவர் தென் சென்னை வடகிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் என தெரிய வந்த நிலையில், அவரை காப்பாற்றி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது, அண்ணா சதுக்கம் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 309 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி.. சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்!