ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத் துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு! சென்னை:திருநின்றவூர் நேரு நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது வீட்டில் தென்னை மரம் இருந்து வந்த நிலையில் அதனை யாரோ சில மர்ம நபர்கள் வெட்டி, அந்த மரத்தின் துண்டை ஆவடி அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் வைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவ்வழியே வந்த ரயில் இன்ஜினில் இந்த மரத்துண்டு சிக்கி உள்ளது.
இதைக் கண்ட இஞ்சின் ஓட்டுநர் அதை உடனடியாக அப்புறப்படுத்தி கையோடு எடுத்துக்கொண்டு ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து தமிழக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி முத்துக்குமார் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு, ரயிலைக் கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களைப் பிடித்து, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத் துண்டுகளை வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி - திருச்சி மார்க்கமாகச் சென்னைக்குக் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 1 மணி அளவில் வாளாடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முகம் தெரியாத யாரோ சிலரால் தண்டவாளங்களுக்கு இடையே லாரி டயர் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அந்த டயர், ரயில் என்ஜினில் மாட்டியதால் இன்ஜினின் மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி ரயில் நின்றது. இதனை தொடர்ந்து ரயில் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அத்தகைய செயலில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.
பின் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில் 8 பேர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதே நாளில் ஒடிசாவில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிக அளவிலான உயிர் இழப்பையும் ஏற்படுத்தியது.
மீண்டும் ஒடிசாவில் சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் மற்றும் கொல்லம் - சென்னை செல்லும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் பெட்டியில் ஏற்பட்ட விரிசல் மற்றும் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் உடைக்கப்பட்டது என ரயில்வே விபத்து கடந்த ஒரு வாராமாக அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் மற்றும் இந்த செயலில் ஈடுபட்டவர்களின் உண்மை நிலை தெரியவில்லை எனினும் ரயில் தொடர்பான செய்திகள் தற்போது மக்களிடையே அதிக அளவிலான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க:MP Train Accident: மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ஒரு வாரத்தில் நிகழ்ந்த ரயில் சம்பவங்கள்!