தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: 3 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை - விருகம்பாக்கம் போலீசார்

கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை

By

Published : Mar 1, 2023, 9:51 AM IST

சென்னை: சாலிகிராமம் குமரன் காலனியின் 2ஆவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (65). இவர் பிரபல போட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளராவார். கடந்த 20 வருடங்களாக சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். பிப். 22ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் நேற்று (பிப்.28) மாலை 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட சந்தோஷ்குமார் அதிர்ச்சியடைந்து, முதல் தளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. பீரோவில் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.13.5 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர், துணை ஆணையர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சென்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வீட்டில் சோதனை செய்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு டிவி.ஆர் கருவிகளை சாதுர்யமாக எடுத்து சென்றுள்ளனர். ஆகையால் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் எப்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், மேலும் ஒரு கொள்ளை சம்பவம் சென்னையில் அரங்கேறி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details