சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் ராமநாதன் என்பவர், கடந்த, டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை அடுத்து அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில், உடனடியாக வீடு திரும்பிய அவர், இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு, கை ரேகை நிபுணர்களுடன் வந்த பழவந்தாங்கல் போலீசார், தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பழவந்தாங்கல் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், இத்திருட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 65) ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 250 வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் கமலக்கண்ணனை ரகசியமாகப் பின்தொடர்ந்ததில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பேருந்து உடனடியாக சுற்றி வளைத்த போலீசார், கமலக்கண்ணனை கைது செய்து சென்னை அழைத்து வந்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கமலக்கண்ணனிடமிருந்து பழவந்தங்களில் திருடிய 35 சவரன் நகை மற்றும் அதற்கு முன்னதாக தாம்பரம் பகுதியில் திருடிய 29 சவரன் நகை என மொத்தம் 64 சவர நகையை போலீசார் மீட்டனர். மேலும் கமலக்கண்ணன் மீது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களில் 33க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.