சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான சி.டி செல்வம், தற்போது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள காவலர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மார்ச் 22ஆம் தேதி அசோக் நகரிலுள்ள காவலர் பயிற்சிக் கல்லூரிக்குத் தனது காரின் பாதுகாவலர் சக்திவேலுடன் சி.டி செல்வம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சி.டி செல்வத்தின் காரை வழிமறித்தனர். அதனால் அவரது பாதுகாவலர் சக்திவேல் காரைவிட்டு இறங்கி வந்து அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையோரம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் சக்திவேல் உடன் தகராறில் ஈடுபட்ட அம்மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி செல்வம் தொலைபேசி மூலம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தகவல் தெரிவித்தார்.
சிசிடிவி மூலம் விசாரணை :இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாவலரான சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் கே.கே நகர் காவல் துறையினர், தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.