தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனர் கைது..!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று சொகுசு கார்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Police have arrested the wife and brother in law of the main accused in the Perambur jewellery shop robbery case
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்

By

Published : Mar 20, 2023, 12:04 PM IST

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜே.எல் நகைக்கடையில் கடந்த மாதம் பத்தாம் தேதி கடை ஷட்டரில் வெல்டிங் மிஷினால் துளை போட்டு ரூ. 6 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிரவலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஸ்ரீதர், திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து நீண்ட நாட்களாக குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் காவல் நிலையத்தில் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் சரணடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சென்னை தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று விசாரணை செய்து இச்சம்பவத்தில் தொடர்புடைய கஜேந்திரன்(31), திவாகரன்(28) ஆகிய இருவரை கைது செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வெல்டிங் மிஷின், சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பெங்களூர் போலீசாரிடம் சரணடைந்த கங்காதரன், ஸ்டீபன் இருவரையும் நீதிமன்ற அனுமதியோடு சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்தனர். இதில் இரண்டு கிலோ தங்கம் பெங்களூரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர விசாரணைக்கு பின் ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்து இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கங்காதரனை மட்டும் இன்னும் ஐந்து நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கூறினர். மேலும் ஸ்டீபன் மீண்டும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து கங்காதரனை மேலும் ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் தனிப்படை போலீசார் கங்காதரனிடம் விசாரணை மேற்கொண்டு, மீண்டும் பெங்களூரு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். மேலும் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்ட கங்காதரனிடம் யார் யாரிடம் தங்க நகைகளை கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரணை செய்தனர். பின்னர் விசாரணையில் கங்காதரன் தனது மனைவி கீதா (26) மற்றும் அவரது மைத்துனரான ராகவேந்திரர் (25) ஆகிய இருவரிடம் நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் அதனை உருக்கி விற்று பணம் ஆக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள் மற்றும் சுமார் 400 கிராம் தங்க நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கங்காதரன், கீதா, ராகவேந்திரா ஆகிய மூன்று பேரையும் சென்னை அழைத்து வந்த போலீசார் கங்காதரனுக்கு போலீஸ் காவல் முடியவடைவதால் கங்காதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கீதா மற்றும் ராகவேந்திரா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரை பிடிப்பதற்கு போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் இதுவரை போலீசார் மொத்தம் 5 கிலோ 100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தங்கை கைது

ABOUT THE AUTHOR

...view details