சென்னை: ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் மூன்றாவது தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்து சிலர் வந்து செல்வதை கண்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜா என்கிற ஓலா ராஜா (19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வந்ததும் தற்போது மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொன்ற பெற்றோர்