சென்னை:சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 12ஆம் தேதி திருவள்ளூர் திருப்பாச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக சென்று கொண்டிருக்கும் காரின் பக்கவாட்டில், கம்பியைப் பிடித்துக்கொண்டு 2 இளைஞர்கள் நின்றுகொண்டும், ஒருவர் காரின் பேனட் மீது அமர்ந்து கொண்டும்; கால் மேல் கால் போட்டு, சினிமா பட பாணியில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்ந்திலையில் காவல் துறையினர் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களான திருவள்ளூர் பத்தியால்பேட்டை மசூதி தெருவைச் சேர்ந்த அன்சார்(22), அப்பாஸ் (19), சர்ஜன்(19) உள்ளிட்ட 4 இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, அவர்களின் எதிர்காலம் கருதி, இளைஞர்களுக்கு அறிவுரை கூறி,
'இதுபோன்று பொதுமக்களுக்கும் தங்களுக்கும் ஆபத்து ஏற்படும் சாகசங்களில் ஈடுபட மாட்டோம் எனவும், வாகனம் ஓட்டுவதற்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட மாட்டோம் எனவும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும்' உறுதிமொழி ஏற்கவைத்துப்பின் இளைஞர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
நெடுஞ்சாலையில் சாகசம் செய்த இளைஞர்களைப் பிடித்து காவல்துறை எச்சரிக்கை காரின் மீது ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கு திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகாசன், ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் 'பஸ் டே' கொண்டாட்டத்தால் பரபரப்பு!