திருச்சி: லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜா (45). இவர் லால்குடி கிளைச் சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே இடப் பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் முத்துவுக்கும் முதல்நிலை தலைமை காவலர் ராஜாவுக்கும் நிலப் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு கடந்த 18-6-2021இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜா, அன்றிலிருந்து இன்று வரை பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ராஜாவின் மனைவி விஜயாவை அவரது தம்பி நிர்மல் மதுபோதையில் திட்டி உள்ளார். இது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் லால்குடி காவல்நிலையத்தில் ராஜாவின் மனைவி விஜயா மற்றும் நிர்மல் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் அந்த மனுக்கள் சிஎஸ்ஆர் போட்டுள்ளனர்.
இந்த புகார் சம்பந்தமாக நேற்று விசாரணைக்கு வந்த ராஜாவை லால்குடி காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் நாற்காலியோடு எட்டி உதைத்ததாகவும், விசாரணையில் ஒருதலைப் பட்சமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் அண்ணன் தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்க லால்குடி காவல் நிலையத்திற்கு சென்ற முதல் நிலைக் காவலர் ராஜா திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீக்காயங்களுடன் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.