சென்னை: இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள "தி கேரளா ஸ்டோரி" என்ற இந்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மத பெண்கள் இஸ்லாமிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பிறகு, தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படம் கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும், சங் பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். கேரளாவில் அரசியலில் ஆதாயம் அடைவதற்காகவே சங் பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இப்படத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று(மே.5) நாடு முழுவதும் வெளியானது.
தமிழ்நாட்டில் இன்று 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதையொட்டி, அசம்பாவிதங்களைத் தடுக்க திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் மட்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு திரையரங்கில் 10 போலீசார் என மொத்தம் 650 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திரைப்படம் பார்க்கச் செல்பவர்களை முழுவதுமாக சோதனை செய்து, அவர்களின் விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளதால் அங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவு