சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்துவருவதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த மே 24ஆம் தேதி அசோக் நகர் காவல் துறையினர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடும் நெருக்கடிக்குப் பின்னர் அவரைப் பணியிடை நீக்கம் செய்தது.
பல மாணவிகளுக்கு ராஜகோபாலன் தொந்தரவு அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல் துறைக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் 25ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.