சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 25) தொடங்கியது. குறிப்பாக சென்னையில் மட்டும் 3,225 பேர் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சீமா அகர்வால் பார்வையிட்டார்.
ஏடிஜிபி சீமா அகர்வால் செய்தியாளர் சந்திப்பு 20 மையங்களில் தேர்வு
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி சீமா அகர்வால், "தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 11 ஆயிரத்து 741 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் 62 ஆயிரம் பேர் தேர்வாகினர். தேர்வான 62 ஆயிரம் பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு இன்று மாநிலம் முழுவதும் 20 மையங்களில் நடைபெற்று வருகிறது.
இவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் அனுப்பப்பட்டது. கரோனா பரவல் காரணமாக தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் நான்கு நாட்களுக்குள் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும். கரோனா நோயால் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையங்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது "என்று தெரிவித்தார்.
எஸ்.ஐ தேர்வில் முறைகேடுகள் இல்லை
மேலும் கடந்த முறை நடந்த எஸ்.ஐ தேர்வில் வேலூர் தேர்வு மையத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று தெரிய வந்தாகவும் சீமா கூறினார்.
இதையும் படிங்க: சேலத்தில் காவலர் தகுதித் தேர்வு