சென்னை:பத்ம ஷேசாத்ரி பால பவன் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரத்தில் ராஜகோபால் என்ற ஆசிரியரை, அசோக் நகர் மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அசோக் நகர் மகளிர் காவலர்கள், மகிளா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
40 மாணவிகள் புகார்
ராஜகோபாலால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல்களை அனுப்பும்படி காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்படி, சுமார் 40 மாணவிகள், பெற்றோர்களின் பல்வேறு தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். அதில், 15 மாணவிகள், பெற்றோர்கள் தமிழ்நாட்டின் பிற பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத்தகவல்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகோபால் மீது மாணவிகள் ஏற்கெனவே புகார் கொடுத்தும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா? பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாக அப்பள்ளியின் முதல்வர், தாளாளரிடம் நேற்று அசோக் நகர் அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
2ஆவது முறையாக பள்ளி முதல்வரிடம் விசாரணை
இந்நிலையில், இன்று காலை பள்ளி முதல்வரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி காலை 10.25 மணியளவில் காவல் நிலையம் வந்த அப்பள்ளியில் முதல்வரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த பாலியல் துன்புறுத்தல் விவாகரத்தில், மேலும் மூவருக்குத் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.