சென்னை: மாநகரில் பதிவு எண் பலகைகள் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் கடந்த 4 நாட்கள் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு தணிக்கையின் மூலம், பதிவு எண் பலகைகள் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வந்த வாகனங்கள் தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கை தொடர்பாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, ”சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்திய இந்த சிறப்பு தணிக்கையில் மொத்தம் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.
பிடிபட்டதில் 98% இருசக்கர வாகனங்கள் எனவும், முறையாக பதிவு எண் பலகை இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடன் வாகனத்தை செலுத்திய நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பதிவு எண் பலகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குற்றப் பின்னணி உள்ளதா? என்றும் சம்மந்தப்பட்ட வாகனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அவ்வாறு எதுவும் கண்டறியப்படவில்லை. பதிவு எண் பலகை பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதன் மூலம், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவதும், விபத்து ஏற்படும் போது சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதும் எளிமையாகும் என்பதால் இந்த தணிக்கை தொடரும் என்றார்.