சென்னை:சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில், கிண்டி-வேளச்சேரி இடையே உள்ள 5 பர்லாங் சாலையில், தனியார் கேஸ் பங்க் அருகே, ஏழு மாடிக் கட்டடம் கட்டுவதற்காக ஒரு தனியார் நிறுவனம் சார்பில், சுமார் 50 அடி பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த பள்ளத்தில் பணியில் இருந்த 8 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பள்ளத்தில் சிக்கி இருந்தவர்களில் 6 பேரை மீட்டனர்.
அதில், மேலும் 2 நபர்கள் சிக்கி இருந்த நிலையில், இருவரும் சுமார் 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, நேற்று (டிச.8) சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை கிண்டி காவல் துறையினர், அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தின் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!
அதனை அடுத்து, அந்த கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளரான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னையில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்தபோது, காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி கட்டுமான நிறுவனம் செயல்பட்டு, தொழிலாளிகளின் மரணத்திற்குக் காரணமாக விளங்கிய கட்டுமான நிறுவனத்தின் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மிக்ஜாமுக்கு முன் - மிக்ஜாமுக்கு பின் - சென்னை கண்ட மாற்றங்கள்! 4 நாட்களுக்கு பின் மீண்டெழும் மாநகரம்!