சென்னை:சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (ஜூன் 21) மதியம் 1.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
உடனடியாக இந்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து, வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, போலியான மிரட்டல் விடுத்தது வியாசர்பாடியைச் சேர்ந்த 21வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வியாசர்பாடி காவல் துறையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருந்ததாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும், கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோல் இவர் தன்னுடைய தந்தையின் மொபைலில் இருந்து ஏற்கனவே ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அப்போது காவல் துறையினர் அவரை எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது.