சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே.8) சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "முன்களப் பணியாளர்களான காவல்துறைக்கு முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதும், சில காவல்துறையினர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.
கரோனாவை எதிர்த்து முன்களப் பணியாளர்களாகப் போராடி வரும் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரெம்டெசிவிர் கள்ளச் சந்தை விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களை கண்காணிக்க உளவுத்துறை மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.