சென்னை மாநகரில் நிரந்தர போக்குவரத்து மேம்பாடு, சி.எம்.ஆர்.எல் மற்றும் மழை நீர் வடிகால் வாரியம், போராட்டம் போன்ற ஒரு குறிப்பிட்ட தற்காலிக சூழ்நிலையைச் சமாளிக்கப் பல நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒரு வழி அல்லது இரு வழிகளையும் மூட வேண்டியுள்ளது. மூடப்பட்டுள்ள சாலைகளின் விவரங்களைக் கூகுள் மேப் உடனடியாக காட்டுவதில்லை.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதை அறிந்து லெப்டன் நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்ட சாலையை மூடுவது மற்றும் அதன் கால அளவு குறித்து 15 நிமிடங்களுக்குள் தெரிவிக்கும் வகையில் ”road ease” எனும் செயலியைத் தயார் செய்துள்ளனர்.
இந்த செயலி மூலமாகக் கூகுள் மேப்பில் புள்ளியிடப்பட்ட சிறப்புக் கோட்டுடன் மூடப்பட்ட சாலைகளைக் காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ”road ease” என்ற செயலியை இன்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,“சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ”road ease” என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத தொகையைச் சென்னையில் கொண்டு வரும் படி தமிழ்நாடு அரசுக்குச் சென்னை காவல்துறை சார்பில் பரிந்துரை செய்துள்ளோம். அதன்படி புதிய அபராத விதி வருகிற 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.