சென்னை:தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து புத்தாடைகள், பட்டாசுகள் வீட்டிற்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னையின் முக்கிய கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரும் அசம்பாவித செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகச் சென்னையில் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் படி தி.நகரில் 2 காவல் உதவி ஆணையர் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி காவல் ஆய்வாளர், 100 ஆயுதப்படை காவலர்கள், 100 ஊர்காவல் படையினர் என 200க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் 25 கண்காணிப்பு கோமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று (நவ.10) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது குறித்துப் பேசுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருநகர காவல் சார்பாக 18 ஆயிரம் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.