சென்னை:நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 1959-ஆம் ஆண்டு சீன படை தாக்குதலில் உயிர் நீத்த 10 ரிசர்வ் படை வீரர்களின் உயிர் தியாகத்தைப் போற்றும் வகையில் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டிஜிபி அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூண் முன்பு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உள்பட காவல் துறை அதிகாரிகள், முப்படைகளின் கிழக்கு பிராந்திய அதிகாரிகள், உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் என கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 264 காவல் துறையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர், சந்திரசேகர் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் தேவராஜன் என மூன்று பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் தினந்தோறும் தங்களது பணிகளில் சவாலையும், ஆபத்துகளையும் சந்தித்து வருவதாகவும், சமூகத்தின் அமைதிக்காகக் காவலர்கள் தங்களது உயிரை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது எனப் பேசினார்.