சென்னை: போக்குவரத்து காவல் துறை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் அபராத வசூல் தேக்கமடைந்தது. இதனை சரி செய்ய சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் போக்குவரத்து காவல் அழைப்பு மையங்களை அமைத்தனர்.
சென்னையின் 12 காவல் மாவட்டங்களிலும் அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த அழைப்பு மையங்கள் மூலம் அபராதம் கட்டாத வாகன ஓட்டிகளை தொடர்புகொண்டு அவர்களுக்கு நிலுவையில் உள்ள விதிமீறல் வழக்குகளை கூறி அபராதத் தொகையை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இதன்மூலம் கடந்த 3ஆம் தேதி வரை மொத்தம் 84 நாள்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 251 வழக்குகளில் மொத்தமாக 11 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 25 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகை செலுத்தும் வசதியை மேம்படுத்த மொத்த எஸ்எம்எஸ் அமைப்பு, கட்டண வசதி மையம் மற்றும் கட்டண தளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளையும் போக்குவரத்து காவல் துறை மேற்கொண்டு வருகிறது.