சென்னை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு ஒரு வீடு மற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதியில் இருந்து ஐபோன்கள் உள்பட 11 செல்போன்கள் திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, திருடப்பட்ட அனைத்து செல்போன்களையும் காவல் துறையினர் ஆய்வு செய்த போது திருடுப்போன மருத்துவர் ஒருவரின் ஐபோன் மட்டும் கொள்ளையன் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்திருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அந்த செல்போனில் லோக்கேஷனை ஆய்வு செய்தபோது திருடன் சென்னைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விக்கிரவாண்டி காவல் துறையினர் உடனடியாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்குள்ள காவல் துறையினர் பர்மா பஜார், சைனா பஜார், ரிச்சி தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்களிடம் காணாமல் போன மொபைல்கள் விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 04) பிற்பகல் 1 மணியளவில் சைனா பஜாரில் செல்போன்களை விற்க ஒருவர் வந்திருப்பதாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பிரேம் குமார் மற்றும் தலைமை காவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது காவல் துறையினரின் வருவதை அறிந்து உஷாரான திருடன், உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் வேகமாக நடந்து சென்றார். உதவி ஆய்வாளர் பிரேம்குமார் திருடனை பின் தொடர்ந்து சென்றபோது, திடீரென திருடன், திருடப்பட்ட செல்போன்கள் வைத்திருந்த பை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.