சென்னை:தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளைக் கொலை செய்து வீட்டில் கொள்ளை அடித்த திருடனை அதிரடியாகக் கைது செய்துள்ளது காவல் துறை. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் வ.உ.சி தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3:00 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை சம்பட்டியால் உடைத்துக் கொண்டு இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அருகில் உள்ள பீர்க்கங்கரனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருங்களத்தூர் காந்தி ரோடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது-25) என்பது தெரியவந்தது. இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அதே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றதும், மீண்டும் அவரது கைவரிசையை காட்டுவதற்காகக் கோயிலுக்கு வந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றும் போது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.