சென்னை: சாலிகிராமம், குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் பிரபல போட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி அருணா தேவி. சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் கடந்த 20 வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டு, 28ஆம் தேதி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் லாக்கரில் இருந்த 66 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 13.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியில் உறைந்த சந்தோஷ்குமார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு கேமரா பதிவுகளை சேமித்து வைக்கும் டிவிஆர் கருவிகளையும் எடுத்து சென்றதால் போலீசாருக்கு கொள்ளையர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போலீசார் அருகில் பிற இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களை ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜே.ஜே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி ராம்குமார் என்பவரின் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23 சவரன் நகை மற்றும் 2 ஆயிரம் பணம் கொள்ளை போன வழக்கில் போலீசார் கொள்ளையனை திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது.